உயிர்கள் வாழ்வதற்கான கட்டமைப்புகளுக்கான அடையாளங்கள், உறைபனியான விண்வெளி மேகக்கூட்டங்களில் உள்ளன என நாசா கண்டறிந்து உள்ளது.
நமது பூமியில் பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவற்றில் மனித இனம் தனித்துவமுடன் இயங்கி வருகிறது. எனினும், உயிரினங்கள் முதன்முதலில் எப்படி சூரிய மண்டலத்தில், அதுவும் பூமியில் தோன்றின என்பது விடை காணப்படாத விசயங்களில் ஒன்றாகவே உள்ளது. அதனை தேடி கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை எட்டியபோதும், ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவற்றில், உயிர்கள் தோன்றுவது பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அதற்கு முன்பிருந்த, ஆதரவான சூழலை பற்றி அறிந்து கொள்ளும் ஆய்வும் நடந்து வருகிறது.
இதற்கான முடிவுகளின் அடிப்படையில், புதிய உயிர்கள் எப்படி தோன்றின என்பது பற்றி கண்டறிய முடியும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாக உள்ளது. தவிரவும், வேறு கோள்களில் உயிர் வாழ்வதற்கான சூழல் அமைவுக்கு அது உதவும் என்றும் மறுபுறம் நம்பப்படுகிறது.
இதன்படி, நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வானியல் நிபுணர் மற்றும் லெய்டன் ஆய்வகத்தின் உதவி பேராசிரியரான மெலிஸ்சா மெக்கிளூர் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு அடங்கிய நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
இதன்படி, நாசாவின் மிக சக்தி வாய்ந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி உதவியுடன் 630 ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்வெளியில் அமைந்த மேகக்கூட்ட அமைப்பு ஒன்றில் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.
நாசா வானியியலாளர்கள், நட்சத்திரங்களில் இருந்து உமிழப்படும் ஒளிகளை கொண்டு, அந்த மேகத்தின் வழியே ஊடுருவ செய்து, ரசாயன பொருட்களின் தடங்களை பற்றி அறியவும் மற்றும் தனிமங்களை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபட்டனர். அதில் பல ஆச்சரியமளிக்கும் தகவல்கள் கிடைத்து உள்ளன.
இதுவரையில் இல்லாத அளவுக்கு, அதிக குளிரான மற்றும் இருள் சூழ்ந்தது என கண்டறியப்பட்ட மேக கூட்டமைப்பு ஒன்றில், மீத்தேன், கந்தகம், நைட்ரஜன் மற்றும் எத்தனால் போன்ற தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதுவரை கண்டிராத, ஒரு பனியடர்ந்த மேகக்கூட்ட அமைப்பு புகைப்படங்களை நாசா வெளியிட்டு உள்ளது.
அந்த மேக அமைப்பிற்குள் தண்ணீர் மட்டுமின்றி வேறு சில மூலக்கூறுகளும் தூசிப்படலங்களாக உறைந்து காணப்படுகின்றன என தெரிவித்து உள்ளது. வாயு மற்றும் தூசி ஆகியவற்றின் கலவையாக நட்சத்திரங்களுக்கு இடையே இந்த அமைப்புகள் (மூலக்கூறு மேகக்கூட்டம்) ஆனது காணப்படும். இவற்றால் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற ரசாயனங்களும் உருவாகும். இந்த தகவல்களின் அடிப்படையில், நட்சத்திரங்கள் உருவாவதற்கு முன்பு, பனியடர்ந்த மூலக்கூறு மேகக்கூட்டங்களின் ஆழ பகுதியில் இருந்து, மெத்தனாலை விட அதிக சிக்கலான பண்புகளை கொண்ட மூலக்கூறுகள் உருவாக முடியும் என்று நாசாவின் வெப் தொலைநோக்கி முதன்முறையாக எடுத்துரைத்து உள்ளது.
இந்த அதிக அடர்த்தியான மேக கூட்டமைப்பு, உடைந்து புதிய நட்சத்திரங்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்த புதிய நட்சத்திரங்கள் தற்போது உள்ள நட்சத்திரங்களுக்கும் முன்னோர்கள் எனப்படும் புரோட்டோஸ்டார் வகையை சேர்ந்தவை. தொடர்ந்து, குளிரான மூலக்கூறு மேகக்கூட்ட அமைப்பை விரிவாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழுவானது, அதில், நீர்ம நிலையிலான பனிக்கட்டி, அவற்றுடன் உறைபனி நிலையிலான அம்மோனியா, மெத்தனால், மீத்தேன் மற்றும் கார்பனைல் சல்பைடு போன்றவற்றை கண்டறிந்தது. இதுபோன்ற உயிர் வாழ்வதற்கு அடிப்படையான கார்போஹைட்ரேட் மூலக்கூறுகள் உள்ளிட்ட ரசாயனங்கள், உயிர்கள் உருவாவதற்கு முன்பு, சரியான ஒரு சூழல் ஏற்பட உறுதுணை புரிந்த குறிப்பிடத்தக்க ரசாயனங்கள் என கூறப்படுகிறது.
இந்த தனிமங்கள் எல்லாம் உயிர் வாழ்வதற்கு தேவையானவை. இந்த சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், புதிய கோள்கள் எப்படி உருவாகி இருக்கும் என்ற ஆய்வில் அவர்கள் ஈடுபட உதவும். தவிரவும், அந்த உலகம், வசிப்பதற்கான தகவமைப்பை எப்படி கொண்டிருக்கும்? என்றும் ஆராய பயன்படும் என ஆய்வாளர்கள் விளக்கம் தெரிவிக்கின்றனர். கோள்களின் அமைப்பில் காணப்படும், இந்த பிரீபயாட்டிக் மூலக்கூறுகள் எனப்படும் கார்போஹைட்ரேட் சேர்மங்களாலான ரசாயனங்கள், நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கு உறுதுணையாய் இருந்துள்ளது. தவிர, நம்முடைய சூரிய மண்டலத்தில் ஒரு தனித்துவ அம்சத்துடனும் திகழ்கிறது.