ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு அமைய இலங்கையில் நிரந்த அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றங்கள் சம்பந்தமாக சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பான் கீ மூன் எதிர்வரும் 6 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். தென் கொரியாவின் அரச நிறுவனமான உலக பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் பான் கீ மூன் இலங்கையுடன் இந்த ஒப்பந்தங்களை கைச்சாத்திட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஸ்தாபிக்கப்பட உள்ள உத்தேச காலநிலை மாற்றங்கள் தொடர்பான பல்கலைக்கழகம் தொடர்பாகவும் இதன் போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும் செய்துக்கொள்ளப்பட உள்ள ஒப்பந்தங்களுக்கு அமைய இரு நாடுகளும் இணைந்து திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் பான் கீ மூன் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
பான் கீ மூன் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இலங்கை சில முறை விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்த பின்னர் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பான் கீ மூனுக்கும் இடையில் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.