ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தாக்குதல் தீவிரவாதிகளாலும் மற்றவை தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களாலும் நடத்தப்பட்டன.
இந்நிலையில ஜெர்மனியின் வடக்கு பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளை குறிவைத்து இன்று கத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் ப்ரோக்ஸ்டெட் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியபோது மர்ம நபர் தாக்குதல் நடத்தினான். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்துவதற்காக, ஹம்பர்க்-கீல் இடையிலான வழித்தடத்தில் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.