தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
உலகத்தமிழர் அமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் 7 தசாப்த காலத்திற்கும் மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவு ம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மீது மிக மோசமான தாக்கங்கள் ஏற்பட்டதாகவும் சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியிருப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்த கருத்தையும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தமிழ் மக்களின் அரசியல் அடையாளத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் அனுசரிக்கப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது