உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தோல்வியடைவோம் என்ற மனநிலை சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடமோ அல்லது எமது கட்சியின் தலைவரிடமோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேனா தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான சக்தி எமக்கு இருக்கிறது. பல்வேறு சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நாம் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். இவ்வாறு போட்டியிட்ட நாம் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியையும் பெற்றுகொண்டிருந்தோம் எனவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் எம்மிடம் சில தவறுகள் காணப்பட்டன. எவ்வாறாயினும் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைவோம் என்ற மனநிலை கட்சியிடமோ அல்லது கட்சியின் தலைவரிடமோ இல்லை.
உலகளவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே, நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. எவ்வாறாயினும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் இரசாயன உரம் மீதான தடையை விதித்து தவறிழைத்திருந்தார். இந்தத் தவறை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது மாத்திரமே எங்களால் மேற்கொள்ளப்பட்ட தவறு. இதனை தவிர வேறு தவறுகளை நாம் செய்யவில்லை.
மாகாண சபை தேர்தலை நல்லாட்சி அரசாங்கமே காலந்தாழ்த்தியது. அவர்களே மாகாண சபைகளை உருவாக்கினார்கள். நாம் தேர்தலைக் காலந்தாழ்த்த எந்தவிதமான முயற்சிகளிலும் ஈடுபடவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளோடு சேர்த்து மாதாந்தம் சுமார் 3 இலட்சம் ரூபாய் வரையில் சம்பளமாகக் கிடைக்கிறது. இவர்களுக்கும் வரி அறவிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.