News

பரந்துபட்ட கூட்டமைப்புக்குத் தமிழரசுக் கட்சி இணங்க வேண்டும்! நிபந்தனை விதிக்க ரெலோ- புளொட் முடிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் யோசனையை பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் என்பன நிராகரித்துள்ளதையடுத்து கூட்டமைப்பாக ஒன்றாக மூன்று கட்சிகளும் போட்டியிடுவதற்குத் தமிழரசுக் கட்சி இணங்குமாக இருந்தால், பரந்துபட்ட கூட்டமைப்பாகப் போட்டியிடுவதற்கான நிபந்தனையைப் பங்காளிக் கட்சிகள் விதிக்கவுள்ளன என்று அறியமுடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மூன்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித் தனியே எதிர்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்றுமுன்தினம் எடுத்தது.

இந்தத் தீர்மானத்தைப் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ ஆகியன நிராகரித்துள்ளன.

இந்தநிலையில் நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான கூட்டம், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது மேற்படி யோசனையை நிராகரிப்பதாக பங்காளிக் கட்சிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவுள்ளன.

இதையடுத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றாகவே போட்டியிடுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி இணங்கி வருமாக இருந்தால், பரந்துபட்ட கூட்டமைப்பாக – கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் உள்வாங்கி தேர்தலில் போட்டியிடும் நிபந்தனையைப் பங்காளிக் கட்சிகள் முன்வைக்கவுள்ளன என்று அறியமுடிகின்றது.

இதேவேளை, பரந்துபட்ட கூட்டமைப்புக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தமிழரசு மற்றும் ரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் உருவாக்கிய கட்சிகளை கூட்டமைப்புடன் இணைக்க முடியாது எனவும் வேண்டுமானால், அவர்கள் மீண்டும் தமிழரசு அல்லது ரெலோவுடன் இணையலாம் என்றும் மத்திய செயற்குழு தீர்மானித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top