புகலிடக் கோரிக்கையாளர்களின் குழந்தைகளில் 200 பேரை காணவில்லை என்றும் அதில் சிலர் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் தற்காலிக ஹோட்டல் தங்குமிடத்திலிருந்து 200 குழந்தைகளை காணவில்லை என்றும் அதில் சிலர் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நாட்களில் சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பிரித்தானிய எல்லைகளை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்று கூறுபவர்களிடமிருந்தும், வருபவர்களை அரசாங்கம் சரியாக நடத்துவதில்லை என்று கூறுபவர்களிடமிருந்தும் குடியேற்றம் தொடர்பாக இரண்டு முனைகளில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் காணாமல் போன குழந்தைகள் பற்றிய ஊடக அறிக்கைகளுக்கு விளக்கமளிக்க குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் செவ்வாயன்று பசுமைக் கட்சியின் உறுப்பினரால் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டார்.
அதனடிப்படையில் விளக்கம் அளித்துள்ள நாட்டின் குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick ), காணாமல் போன 200 குழந்தைகளில் 13 பேர் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அதில் ஒருவர் பெண் என்றும், காணாமல் போனவர்களில் 88% பேர் அல்பேனியாவில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புகலிடக் கோரிக்கையாளர்களின் தற்காலிக ஹோட்டல் தங்குமிடங்களில் 18 வயதுக்குட்பட்டவர்களின் நடமாட்டம் உள்ளேயும் வெளியேயும் கண்காணிக்கப்பட்டு அறிக்கையிடப்பட்டு வருவதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கலந்து கொள்ளும் போது அவர்களுடன் சமூக சேவையாளர்கள் இருப்பார்கள் என்றும் அமைச்சர் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் தற்காலிக ஹோட்டல் தங்குமிடங்களில் “ஆதரவற்ற புகலிடக் கோரிக்கை குழந்தைகளை தடுத்து வைக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை.” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பசுமைக் கட்சியின் கரோலின் லூகாஸ் பேசிய போது, குழந்தைகள் பறிக்கப்படும், கடத்தப்படும் மற்றும் குற்றவாளிகளால் வற்புறுத்தப்படும் ஆபத்து இருப்பதாக எடுத்துரைத்தார்.
“பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் உள்துறை அலுவலகத்தால் தூக்கி எறியப்படுகிறார்கள். அவர்களில் ஏராளமானோர் காணாமல் போகிறார்கள். நாங்கள் அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் சில அடிப்படைப் பாதுகாப்புகளை பயன்படுத்துமாறு உள்துறை அலுவலகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.