பெருவில் சுற்றுலா பஸ் மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்தில் சிக்கிய 25 பேர் உயிரிழந்தனர்.
தென்அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான டம்ப்ஸ் நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் ஆர்கனோஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் மலையில் இருந்து உருண்டு கீழே விழுந்தது. இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.