News

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- வடகொரியாவில் ஊரடங்கு அமல்

வடகொரியாவின் தலைநகரில் நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் அந்த நாட்டின் தலைநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி ஆட்டிப்படைத்தது. பெரும்பாலான உலக நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என கூறி வந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை வடகொரியா உறுதி செய்ததது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளானதாக அப்போது தகவல்கள் வெளியாகின. எனினும் கொரோனாவை வென்றதாக ஆகஸ்டு மாதமே வடகொரியா அறிவித்தது.

இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் கொரோனா தொற்று பரவல் எழுச்சி பெறும் அபாயம் எழுந்துள்ளது.

இதனையடுத்து, பியாங்யாங் முழுவதும் 5 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 29-ந் தேதி பியாங்யாங்கில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நாளும் பல முறை உடல் வெப்பநிலையை பரிசோதித்து, அதன் விவரங்களை சுகாதார அதிகாரிகளிடம் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு தொடர்பான அரசின் உத்தரவில் கொரோனா பரவல் குறித்து குறிப்பிடவில்லை என்றபோதும், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு கொரோனாவின் தாக்கமே காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

வடகொரியாவின் அண்டை நாடான சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

இந்த சூழலில் வடகொரியாவின் தலைநகரில் நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பியாங்யாங்கை தொடர்ந்து, வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top