News

ரணிலின் தீர்வுத்திட்டம்: தமிழரையும் இந்தியாவையும் வீழ்த்தும் பொறி

 

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தன்று இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்கப் போவதாக செய்திகள் பலவாறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எத்தகைய தீர்வு திட்டம் ஒன்றை பற்றி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க முடியும் என்பது பற்றி சிந்திப்பது மிக அவசியமானது.

மக்கள் ஆதரவற்று, தேர்தலில் படுதோல்வி அடைந்து அதிர்ஷ்டமற்ற ஒரு தலைவராக காணப்பட்ட ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட கொழும்பு கிளர்ச்சியின் பின்னணியில் தன்னுடைய இராஜதந்திர வியூகத்தினால் இன்று இலங்கையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

அத்தகையவர் ஒட்டுமொத்த சிங்கள தேசியவாதிகளும் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை மறுத்து வந்த நிலையில் ஒரு பலவீனமான நிலையில் இருந்து கொண்டு ரணில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை தரப்போகின்றார் அல்லது முன் வைக்கப் போகின்றார் என்றால் அதில் இருக்கக்கூடிய ராஜதந்திர அடைவுகள் என்ன?

சிங்கள தேசம் எவ்வாறு தொடர்ந்து உலகளாவிய அரசியலில் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளப் போகின்றது. என்பதிலிருந்துதான் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தலைவர்களின் ராஜதந்திர முதிர்ச்சியை அளவிட வேண்டும்.

உலக அரசியல் ஒழுங்கு என்பது முற்றிலும் நலன் சார்ந்தது. அவரவர்களுக்கு கிடைக்கின்ற நலன்களின் அடிப்படையிலேயே சர்வதேச உறவுகள் மலர்கின்றன. இன்றைய நிலையில் மேற்குலகத்துடனும் சீனாவுடனும் அத்தகைய நலன்களின் அடிப்படையிலேதான் உறவுகளை இலங்கை அரசு பலப்படுத்துகிறது. அவ்வப்போது தனது தேவைக்கு இந்தியாவையும் அரவணைப்பது போல பாசாங்கு செய்கிறது. இவை அனைத்தும் இலங்கையில் சிங்கள பௌத்த அரசை தொடர்ந்து தக்க வைப்பதற்கான உத்திகளே.

இப்போது ரணில் விக்ரமசிங்க மேற்குலகத்துடன் அதுவும் குறிப்பாக அமெரிக்காவுடன் மிக இறுக்கமாக கூட்டுச்சேர்ந்து செயல்பட முடிவெடுத்துவிட்டார் என்பது தெரிகிறது.

மேற்குலத்தவர் கொண்டுள்ள அரசியல் சிந்தனையும், அரசியல் மனப்பாங்கும் சிங்களதேச அரசியலுக்கும், அதன் செல்நெறிக்கும் முற்றிலும் பொருந்தமற்றது. மேற்குலகச் சிந்தனை முற்றிலும் ஜனநாயக மயப்பட்டதாக அமைய சிங்களதேசச் சிந்தனை இனவாத, குழுவாத, மொழிவழி அடிப்படையிலான மனப்பாங்கையும் பண்பாட்டையும் கொண்டதாகவும் இருப்பதனால் மேற்குலகச் சிந்தனைக்குள்ளால் மேற்குலகம் முன்னெடுப்புக்களுடன் ஈழத் தமிழர் பிரச்சினையை கையாள்வது என்பது மிகவும் சிக்கல் வாய்ந்ததாகவே இருக்கும்.

அமெரிக்க நாகரிகம் என்பது குடியேற்ற நாகரிகம். எனவே இன்றும் அமெரிக்காவிலோ மேற்குலகிலோ சென்று குடியேறியவர்கள் தொடர்ந்து அங்கு வாழ்ந்து அந்த நாட்டின் முழுமையான அரசியல் அங்கீகாரத்தை பெற்று நாட்டின் தலைவராக கூடிய வாய்ப்புகள் உள்ளது. அத்தகைய குடியேறிகள் நாட்டின் தலைவராகியமையை அமெரிக்க வரலாற்றிலும் இங்கிலாந்து வரலாற்றிலும் அண்மைக்காலங்களில் பார்க்க முடிகிறது.

இப்பின்னணியில் குடியேற்றங்களை ஆதரிக்கின்ற மேற்குலக நாகரிகம் இலங்கைக்கு முற்றிலும் பொருத்தமற்றது. குடியேற்றங்களை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களை மேன்மேலும் ஒடுக்குவதற்கே வழிகோலும். இலங்கையின் இனப்பிரச்சனை குடியேற்றத்தின் விளைவால் ஏற்பட்டதுவே. தமிழ்த்தேசிய இனத்தின் தாயகத்தை கபாளீகரம் செய்ததனால் ஏற்பட்டதுவே. கீழைத்தேச மக்கள் மண்ணை நேசிக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள். எந்த சந்தர்ப்பத்திலும் மண்ணை இழப்பதை அந்த மக்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மண் மக்களின் ஆத்மாவாக இருக்கிறது. எனவே மண்ணை விட்டுக் கொடுக்காத மக்களின் மனப்பாங்கில் மேற்குலக குடியேற்ற நாகரீக அனுமதிப்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நடைமுறைக்கும் சாத்தியப்படாது

அது சிங்கள மக்களாயினும்சரி தமிழ் மக்களாயினும்சரி இரண்டு சாராரும் தத்தம் நிலங்களை இழப்பதற்கு ஒருபோதும் தயார் இல்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்காவின் இத்தீர்வுத்திட்டம் என்பது முற்றுமுழுதும் ஒரு புதிய நிலஎல்லை நிர்ணயத்துடன் கூடியதான ஒரு தீர்வு திட்டமாகவே அமைய முடியும். அத்தகைய ஒரு புதிய நிலஎல்லை நிரிணயத்தின் மூலம்தான் சிங்கள மக்கள் மத்தியில் தன்னை சிங்களத்தின் பாதுகாவலனாக காட்டவும் முடியும். அதன்மூலமே சிங்கள மக்களின் பேராதரவையும் திரட்டமுடியும்.

அத்தோடு இந்த தீர்வு திட்டத்தில் துறைமுகங்கள், மகாவலி அபிவிருத்தி மற்றும் கனிமவளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற வரையறைக்குள் ஒரு தீவுத்திட்டத்தை முன் வைப்பதுமாக அமையலாம்.

இதன் மூலம் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எந்த பொருளியல் நலன்களையும் அடையவிடாமல் தடுக்கக்கூடிய வழிவகைகளை கொண்டதான ஒரு தீர்வு திட்டத்தையே தற்போதைய ரணில் அரசாங்கத்தால் முன்வைக்க முடியும்.

இன்றைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வதேச நிதி உதவி தேவை. அவ்வாறு சர்வதேச நிதி ஆதரவை பெறுவதற்கு உள்நாட்டில் இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒரு தீர்வுக்கு திட்டத்தை முன்வைப்பதன் மூலம் தன்னை தூய்மையானவராக காட்டி சர்வதேச நிதி உதவியை பெற்று சிங்கள தேசத்தை மீள்கட்டுமானம் செய்ய முடியும்.

இரண்டாவது வரலாற்று ரீதியாக இந்திய ஆக்கிரமிப்பு பற்றிய அச்சம் சிங்கள தேசத்தில் இன்றும் இருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனை இருக்கும் வரைக்கும்தான் இந்தியா இலங்கைக்குள் தலையிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். தமிழர் பிரச்சனை என்ற ஒன்றைக் கையில் எடுத்துத்தான் தற்போது இந்தியா இலங்கை மீது செல்வாக்கு செலுத்த முற்படுகிறது என்றும் நம்புகின்றனர்.

ஆகவே தமிழர் பிரச்சனையை தீர்த்து வைப்பது அல்லது தற்காலிகமாக தீர்த்தது போன்று ஒரு நிலைமையை காட்டுவதன் மூலம் இந்தியாவை இலங்கையின் அரசியலுக்குள் இருந்து அப்புறப்படுத்த முடியும். இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா-ஈழத்தமிழர் உறவு நோவு பட்ட உறவாக, வலிகள் நிறைந்த உறவாக, நம்பிக்கையீனங்கள் நிறைந்த ஒரு உறவாக அண்மைக் காலத்தில் மாறியிருக்கிறது. இப்போது சிங்கள தேசமே முன்வந்து ஒரு தீர்வை முன்வைப்பதன் மூலம் இந்தியா ஈழத்தமிழர் சார்ந்து பாராமுகமாக இருக்கின்றது என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்க முடியும். இந்தத் தோற்றப்பாட்டை மேலும் வளர்த்து இந்தியாவோடான ஈழத் தமிழர்களுடைய நட்புமுரண்பாட்டை ஒரு பகைமுரண்பாடாக மாற்றிடவும் சிங்கள தேசத்தினால் முடியும்.

அதற்கான வாய்ப்பு இப்போது சிங்கள தேசத்திற்கு கிடைத்திருக்கிறது. இவ்வாறு இந்தியாவை ஒருமுறை இந்த விவகாரத்தில் இருந்து அகற்றிவிட்டால் எதிர்காலத்தில் இந்தியா இலங்கை தமிழர் பிரச்சினை சார்ந்து தலையிடுவதற்கான வாய்ப்புகள் ஒருபோதும் வராது. அவ்வாறு வராமல் தடுப்பதற்கான ராஜதந்திர வித்தை சிங்கள தேசத்திற்கு நன்கு தெரியும்.

ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வாக இந்தியா தொடர்ந்து குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்ற 13-ஆம் திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை ஆட்சி முறையானது பழம் இருக்க சுளை பிடுங்கிய பலாப்பழம் போன்றது.

அதையொட்டிய சற்று மேம்பட்ட ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்தால் இந்தியாவுக்கு இலங்கை மீது பிடி தளர்ந்து போகும். அல்லது செல்வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்புகளை அறுத்து விடப்பட்டுவிடும். அதேபோல 13 க்கு சற்று மேலானதாக இருப்பதாக போக்கு காட்டி தமிழ் மக்கள் எந்த நலனையும் பெறமுடியாத ஒரு நிர்வாக ஒழுங்கை கொண்ட தீர்வைத் திட்டத்தை முன்வைப்பதன் மூலம் இந்தியாவை வாய்திறக்க முடியாமல் அடைத்து விடமுடியும்.

13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான தீர்வு என்பது தமிழர் தாயகம் இரண்டாக பிரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களாக காணி பொலிஸ் அதிகாரங்களற்ற ஒரு நிர்வாக முறையாக இருக்கின்றது. இதில் சில மாற்றங்களை செய்து சிறிய விட்டுக் கொடுப்புகளை செய்து ஒரு தீர்வுக்கு திட்டத்தை முன் வைப்பதுதான் ரணிலின் நோக்கமாக இருக்க முடியும்.

அத்தோடு இத்தீர்வுத் திட்டத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பது என்ற ஒன்றையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே தீர்வுத்திட்டம் வந்தால் அரசியல் கைதிகள் இயல்பாகவே விடுபட்டுவார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் ரணில் விக்ரமசிங்க கைதிகளை விடுவிப்பதும் ஒரு அரசியல் தீர்வு திட்டத்தின் ஒரு பகுதி என்று ஒரு போக்கு காட்டி ஏமாற்றுவது கவனிக்கத்தக்கது.

இந்த தீர்வுத்திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பை வைத்துக் கொண்டு அவர்களின் ஊடாக கைதிகள் விடுவிக்கப்படுவதும், இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்படுவதும் ஒரு தீர்வு திட்டத்தின் ஒரு பகுதி போல காட்டுவது.

‘‘யுத்த காலத்தில் நடந்த அனைத்து இனப்படுகொலையையும் நீங்களும் மறந்து விடுங்கள். நாங்களும் மறக்கிறோம். புதிய உறவை வளர்ப்போம்‘‘ என்ற வகையிலேயே இந்த அரசியல் நகர்வுகள் இடம்பெறுகின்றன.

இங்கே மறப்பதற்கு எதுவுமில்லை. இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி தேவை. பரிகாரம் தேவை. இதுவே தற்போது முக்கியமானது என்பதை தமிழ் தலைமைகள் கருத்திற் கொள்ளவேண்டும். அதனை எந்த விட்டுக்கொடுப்புக்கும் அப்பாற்பட்டு இறுகப் பற்றியிருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.

அதே நேரத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளை சிங்கள. மாகாணங்களுடன் இணைப்பது. சிங்கள மாகமாகாணங்களின் சில பகுதிகளை வட-கிழக்குடன் இணைத்து இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கான ஒரு செயல் திட்டத்தையும் இது கொண்டு இருக்க முடியும். ஏற்கனவே இலங்கை அரசிடம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்புகளை சிங்கள மாகாணங்களுடன் இணைப்பதற்கான ஒரு திட்டம் இருக்கிறது

அது அண்மைக்காலங்களில் பேசப்பட்டும் இருக்கிறது. அதாவது வடக்கு நோக்கி ஒரு கவுண்ட பிரைமிட்டு வடிவில் முல்லைத்தீவு நோக்கியும் மன்னார் நோக்கியும் திருகோணமலை நோக்கியும் நிலங்களை உள்வாங்கி சிங்கள மாகாணங்களுடன் இணைப்பது.

அவ்வாறே கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தை அம்பாறை மாவட்டத்தின் பெரும்பகுதியை தென்மாகாணத்துடன் இணைப்பது அல்லது பொருத்தமான சிங்கள மாகாணங்களுடன் இணைப்பது போன்ற திட்டங்களை புதிய நிலஎல்லை நிர்ணயம் என்ற கோட்பாட்டின் கீழ் கொண்டுவந்து தமிழர் தாயகத்தை சிதைக்கக்கூடிய முன்மொழிவுகளை இந்தப் புதிய தீர்வுத் திட்டத்தில் முன்வைக்க வாய்ப்புக்கள் உள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவின் குறிப்பிட்ட சில பகுதிகளையும் முல்லத்தீவு மாவட்டத்தின் அலம்பல், கொக்குளாய் பகுதியையும் அனுராதபுர மாவட்டத்துடன் இணைப்பது. அவ்வாறே திருகோணாமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தையும் அனுராதபுர மாவட்டத்துடன் இணைப்பது. இதன் மூலம் நிரந்தரமாக வடக்குக் கிழக்கை நிலத்தொடர்பு ரீதியாக பிரிப்பதற்கான திட்டங்களும் உள்ளடங்க கூடும்.

அவ்வாறே மன்னர் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் பெரும்பகுதியை அனுராதபுரம், புத்தளம் மாவட்டங்களுடன் இணைப்பதற்கான திட்டங்களையும் இந்த கவுண்ட பிரமிட்டு வடிவிலான திட்டம் கொண்டுள்ளது.

அவ்வாறே சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளையோ அல்லது அம்பாறை மாவட்டத்தையோ சிங்கள மாகாணங்களுடன் இணைப்பதன் மூலம் முஸ்லிம்களுடைய பலத்தை வீழ்த்திட முடியும். அம்பாறையில் முஸ்லிங்களும் சிங்கவரும் ஏறக்குறைய சமதொகையினர்.

அம்பாறையை பொறுத்தளவில் இலங்கையின் சனத்தொகையில், சனத்தொகை ரீதியில் முஸ்லிம்கள் அடர்த்தியாக பெரும் தொகையினராக இருந்தாலும் நிலப்பரப்பு ரீதியில் அவர்கள் மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள்ளேயே வாழ்கிறார்கள் என்பதை இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே அம்பாறையை கிழக்கிலிருந்து வெட்டுவதன் மூலம் முஸ்லிம்களுடைய அரசியல் தளத்தை சிதைப்பதற்கான யுத்தியும் இங்கு உள்ளது.

மேலும் தமிழர் பிரச்சனை இருக்கும் வரை, தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் வரைதான் முஸ்லிம்களின் போராட்டம் அல்லது போட்டோ போட்டி இருக்கும். முஸ்லிம்கள் தமக்கான அரசியல் உரிமைக்காக இன்றைய நிமிடம்வரை காத்திரமான எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. அவர்கள் தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவுகளின் பலன்களை அனுபவிப்பவர்களாகவே இன்று வரை உள்ளனர்.

தமிழர்கள் போராட்டம் நடத்தியதன் மூலம் முஸ்லிம்கள் அரசியல் அங்கீகாரத்தையும், பொருளியல் வளங்களையும், அரசியல் அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர், ஆனால் இப்போது தமிழர் பிரச்சினையினால் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் தீர்வு வருகின்றபோது மாத்திரமே தங்களுக்கும் அரசியல் தீர்வு என்று மேடைக்கு வருவதை காணமுடிகிறது. தமிழர் பிரச்சினை சார்ந்து பேசுகின்ற போதே முஸ்லிம்களுக்கான பிரச்சினை சார்ந்து முஸ்லிம் தலைவர்களால் பேச முடிகின்றது. இல்லையேல் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தாமல் தமிழர்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசாமல் விடப்பட்டால் முஸ்லிம்கள் வாய்பொத்தி மௌனிகளாக இருந்து விடுவதையே வரலாறு பதிவுசெய்கிறது.

எனவே சிங்கள தேசத்துக்கு தமிழர் பிரச்சினையை தீர்த்து விட்டால் முஸ்லிம்களால் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் எந்த பிரச்சினைக்காகவும் போராட தயாரில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழர் தமது உரிமைப் பிரச்சினை சார்ந்து போராடினால் மாத்திரமே முஸ்லிம்கள் போராடுவார்களே தவிர அவர்கள் முன்கதவால் முன்னணியில் வந்து நின்று போராடுவதற்கு தயாரில்லை என்பதும் இலங்கை முஸ்லீம் அரசியலில் எதார்த்தமாக உள்ளது.

ஏனெனில் இலங்கையிலுள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் சுமாராக 60% முஸ்லிங்கள் வாழ்நிலையில் தெற்கின் சிங்களப் பகுதிகளில் சிதறியே வாழ்கின்றனர். ஆதலால் அவர்கள் சிங்கள அரசுடன் போராடுவது அவர்களது வர்த்தகப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் தீங்கானது.

இன்று இலங்கை தீவில் சிங்கள பௌத்த அரசை தொடர்ந்து தக்க வைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் சிங்கள தேசம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன எந்த சிங்கள தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் என்ன அவர்கள் சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதற்கு கங்கணம் கட்டி நிற்பர். தற்போது சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதற்கு இலங்கைத்தீவில் இந்தியத் தலையிட்டை அகற்றுவதும் சிங்கள அரசியலில் முதன்மையானது.

அதே நேரத்தில் தமிழ் மக்களை ஒடுக்குவதையும், முஸ்லிம் மக்களை ஒடுக்குவதையும் இலக்காகக் கொண்டு செயல்படும் சிங்களத்தின் விஜத்மக புத்திஜீவிகள் குழத்தின் முன்னணி புத்திஜீவியாகிய பட்டாலி சம்பிக்க ரணவக்க எழுதிய நூல் 2050 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக்க் கொண்ட நாடாக இலங்கை மாறிவிடும் என்ற ஒரு அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

எனவே இந்தப் பின்னணியில் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் இரு சாராரையும் எவ்வாறு ஒடுக்கலாம் என்பதே சிங்கள தேசத்தின் சிந்தனையாக இருக்கிறது. சிறுபான்மையினராகிய தமிழர்களும் முஸ்லிம்களும் அவர்கள் மத்தியில் இருக்கின்ற கட்சிகளும் தமக்குள்ளே முட்டி மோதி பிளவுபட்டு செயற்படுவதன் மூலம் எதிரிக்கு சேவகம் செய்து சிங்கள பௌத்த அரசை பாதுகாப்பதற்கே வழிசமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற துயர் தோய்ந்த பக்கத்தை வரலாறு பதிவாக்குகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top