ஒரு வாரத்தில் மட்டும் மாரடைப்பு காரணமாக 98 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் மக்களை உறைய வைக்கும் விதமாக குளிர் அலை வீசி வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கடுமையாக குளிர் அடிக்கும் மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் வரிசையில், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் குளிரின் தாக்கம் அதிகமானதால் கான்பூர் மாவட்டத்தில் பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டும் மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி பாதிப்பால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 44 பேர் மருத்துவ சிகிச்சையின்போதும், 54 பேர் மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்கு முன்னதாகவும் உயிரிழந்துள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் 723 பேர் இதய பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளனர்.
பொதுவாக வயதானவர்களுக்குதான் மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் என நிலை மாறி இந்த குளிர்காலத்தில் இளம் வயதினர் பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.