‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அது தமிழீழம் மலர வழி வகுக்கும்’ என உத்தர லங்கா சபாவின் தலைவரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், நாடு பிளவுபடாது. எனவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், யாராவது 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தக்கூட்டத்தை புறக்கணித்த விமல் வீரவன்சவிடம் அதிபரின் கருத்து தொடர்பில் செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக் கூடும் என்று அதிபருக்கு தெரியும்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதனை பல தடவைகள் தெரிவித்து விட்டோம்.
தான் நிறைவேற்று அதிகார அதிபர் என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகிறார்.
சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே அதிபர் செயற்படுகின்றார். ஆனால், சிங்கள மக்கள் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.
அதிபர் இவ்வாறு நடைமுறைச்சாத்தியமற்ற கருத்துக்களைக் கூறி காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்து தான் நாம் சர்வகட்சி கூட்டத்தை புறக்கணித்தோம்” – என்றார்.