600க்கும் மேற்பட்ட உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்ட விவகாரம்: ரஷ்யாவின் கருத்துக்கு உக்ரைன் மறுப்பு!
ஒரு தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறும் கூற்றை உக்ரைன் மறுத்துள்ளது.
ரஷ்யா எந்த ஆதாரமும் இல்லாமல், கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்டதாக கூறுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது ரஷ்ய பிரச்சாரத்தின் மற்றொரு பகுதி என உக்ரைனிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி செரெவதி தெரிவித்தார்.
உக்ரைனியப் படைகள் தற்காலிகமாக தங்கியிருந்த கட்டடங்கள் மீது நடத்திய தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1,300க்கும் மேற்பட்ட உக்ரைனிய துருப்புக்கள் இரண்டு கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
மகிவ்காவில் கொல்லப்பட்ட 89 ரஷ்ய துருப்புக்களின் மரணத்திற்கு பழிவாங்கும் தாக்குதலாக அல்லது பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.