இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.
இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு காரணங்களால் மார்ச் 9 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கடினம் என்று இந்த மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் தேதி குறித்த அறிவிப்பாணை வரும் மார்ச் 3ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இனி தேர்தல் நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகரிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும். தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தேர்தல் ஆணையம் கேட்க உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பேசுகையில், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதே ஜனாதிபதியாக தனது பணி என்றும், இப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கூடுதல் அழுத்தத்தையே தரும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.