News

ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அடாவடி: ஐ.நா. கடும் கண்டனம்

 

வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதித்தது. சியோல், கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியா தனது அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டுமென அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக வடகொரியா தனது அணு ஆயுதங்களை விரிவுபடுத்தி வருகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இந்த சூழலில் கொரிய தீபகற்பத்தில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா கடந்த வாரம் அறிவித்தன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா போர் பயிற்சியை தொடங்கினால் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என இரு நாடுகளையும் எச்சரித்தது. மேலும் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே ‘ஐசிபிஎம்’ என்று அழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.

இந்த ஆண்டின் வடகொரியா நடத்திய முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை இதுவாகும். ஒரே நாளில் 2 ஏவுகணைகள் சோதனை இதனால் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் வடகொரியா நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை சோதித்து அதிரவைத்தது. இதனை தென்கொரியா மற்றும் ஜப்பான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளன.

இது குறித்து இருநாட்டு ராணுவமும் வெளியிட்ட கூட்டறிக்கையில், “வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் அருகே உள்ள மேற்கு கடற்கரை நகரில் இருந்து திங்கட்கிழமை காலை 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. 2 ஏவுகணைகளும் 100 கி.மீ உயரத்தில் 400 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று வடகொரியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான கடல் பகுதியில் விழுந்தன” என கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா, வடகொரியாவை சேர்ந்த 5 நிறுவனங்கள் மற்றும் 4 தனிநபர்கள் மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

ஜப்பான், அமெரிக்கா ஆகிய 2 இருநாடுகளும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஏவுகணைகள் சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top