காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சமீப காலமாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகரில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் ராணுவத்தினரின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹமாஸ் போராளிகள் நேற்று முன்தினம் மாலை இஸ்ரேலின் தெற்கு நகரம் மீது ராக்கெட் ஒன்றை வீசினர். எனினும், இஸ்ரேலில் வான்பாதுகாப்பு அமைப்பு அந்த ராக்கெட்டை நடுவானிலேயே இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா நகரில் ஹமாஸ் போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாலை வான்தாக்குதல் நடத்தியது.
சுரங்கப்பாதையில் செயல்பட்டு வரும் ராக்கெட் உற்பத்தி தளம் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த வான்தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை. ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.