சீனாவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர்.
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்ஷாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.
கார்கள், லாரிகள் என 50-க்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இதில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இதில் அங்கு கரும் புகை மண்டலம் சூழ்ந்தது.
இந்த கோர விபத்தில் உடல் நசுங்கியும், தீயில் கருகியும் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.