News

துருக்கியின் காசியான்டெப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, 200க்கும் அதிகமானோர் காயம்!

சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள தென்கிழக்கு துருக்கியின் காசியான்டெப்பில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிரியாவில் குறைந்தது 42பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் துருக்கியில் பத்து நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு காசியான்டெப் நகருக்கு அருகே 17.9 கிமீ (11 மைல்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தலைநகர் அங்காரா மற்றும் துருக்கியின் பிற நகரங்களிலும், பரந்த பகுதியிலும் உணரப்பட்டது.

பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், அந்த இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது.

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் உள்ளிட்ட 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய உட்துறை அமைச்சர் சுலேமோன் சோய்லு தெரிவித்தார்.

காசியான்டெப்பின் வடகிழக்கில் தியர்பாகிரில் உள்ள ஒரு வணிக வளாகம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top