துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டது. நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 42 ஆயிரம் எட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி துருக்கியில் 36,187 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள நபர்களை தேடும் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே 200 மணிநேரத்திற்கு பின்னர் இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றன. இதனால், இன்னும் மக்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் எழுகிறது. அவர்களை தேடி கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.