நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வார காலத்திற்கு பின்னும், தெற்கு துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நபர்களின் குரல் இன்னும் கேட்கிறது என மீட்பு குழுவினர் கூறுகின்றனர்.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 41 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வார காலம் ஆன பின்னும், தெற்கு துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள நபர்களின் குரல் இன்னும் கேட்கிறது என மீட்பு குழுவினர் கூறுகின்றனர். இதனால், இன்னும் பலரை மீட்க கூடிய சாத்தியம் உள்ளது என்ற நம்பிக்கை லேசாக ஒளிர்கிறது.
நேற்று இடிபாடுகளில் இருந்து 9 பேர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், உதவி குழுவினரின் பார்வையானது தற்போது, புகலிடம் அல்லது போதிய உணவு இன்றி கடும் குளிரில் போராடுவோரின் பக்கம் திரும்பியுள்ளது என செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
இதுபற்றி ஒரு வார கால மீட்பு பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான சலாம் ஆல்தீன் கூறும்போது, எனது வாழ்க்கையில் இதுபோன்ற மரண சம்பங்களை பார்த்ததே இல்லை. நிறைய சடலங்கள்.. என அழுதபடி கூறினார். ஆர்மகெடான் படத்தில் வரும் காட்சிகள் போன்று சூழ்நிலை உள்ளது. மொத்த நகரமும் மரணமடைந்தவர்களின் வாடை அடிக்கிறது என கூறியுள்ளார்.
200 மணிநேரத்திற்கு பின்னர் இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றன. இதனால், இன்னும் மக்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் எழுகிறது. அவர்களை தேடி கண்டறிய வேண்டும் என்று மீட்பு பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.