News

துருக்கி நிலநடுக்க பாதிப்பு; 30 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட ஆர்மீனிய எல்லை பகுதி

நிலநடுக்க பாதிப்பை அடுத்து, 30 ஆண்டுகளுக்கு பின் துருக்கி மற்றும் ஆர்மீனியா இடையேயான எல்லை பகுதி நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்காக திறக்கப்பட்டு உள்ளது.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த வார திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் 100-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

நிலநடுக்க பாதிப்புக்கு இரு நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்க பாதிப்பில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவியாக, இந்தியா போன்ற உலக நாடுகள் மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை விமானங்களில் அனுப்பி வருகின்றன. 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த பேரிடர் நிவாரண படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஆர்மீனியா அரசுடனான சுமூக பேச்சுவார்த்தைக்கான துருக்கியின் சிறப்பு பிரதிநிதி செர்டார் கிலிக் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 100 டன்கள் எடை கொண்ட உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட 5 வாகனங்களில் ஆர்மீனிய நாட்டு குழுவினர் ஆலிகேன் எல்லை பகுதி வழியே கடந்து வந்துள்ளனர். இதற்காக ஆர்மீனிய அரசுக்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, ஆர்மீனியா குடியரசின் துணை அதிபர் ரூபன் ரூபின்யான் கூறும்போது, ஆர்மீனியா மற்றும் துருக்கி இடையேயான எல்லை பகுதி வழியே மனிதநேய உதவிக்கான பொருட்களுடன் வாகனங்கள் இன்று கடந்து சென்றன. அவை நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு செல்லும். இந்த உதவியை செய்ய முடிந்ததற்காக மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின் இந்த எல்லை திறக்கப்பட்டு உள்ளது. 1915-ம் ஆண்டு நவீன துருக்கிக்கு முன்னர் அரசாட்சி செய்த ஓட்டோமன் காலத்தில், 15 லட்சம் ஆர்மீனிய மக்கள் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மோதல் போக்கு காணப்பட்டது. 1993-ம் ஆண்டு ஆர்மீனியர்களுக்கும், துருக்கியின் அஜர்பைஜான் பழங்குடியின மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதனை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதி மூடப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top