News

 நிலநடுக்க இடிபாடுகளில் 30 மணிநேரம்… சகோதரனை அணைத்து காப்பாற்றிய சிறுமி; வைரலாகும் வீடியோ

நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே 30 மணிநேரம் சிக்கி கொண்ட போதும், சகோதரனை அணைத்தபடி காப்பாற்றிய சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், வடக்கு சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொண்ட சிறுமி, 30 மணிநேரம் வரை தனது சகோதரனை காப்பாற்ற போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.

அவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்போது, நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளனர். இதில், மரியம் என்ற அந்த 7 வயது சிறுமி, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுத்த நிலையில் இருக்கிறார். அவருக்கு அருகே சிறுமியின் சகோதரன் படுத்து கிடக்கிறான். இருவரும் நகர முடியாமல் கிடக்கின்றனர். எனினும், சகோதரன் மீது தூசு உள்ளிட்ட எதுவும் விழுந்து விடாமல் இருக்க தலையில் கையை கொண்டு சிறுமி போர்த்தியபடி காணப்படுகிறார்.

சிமெண்ட் சிலாப்புகளுக்கு கீழே சிக்கியிருந்த 2 பேரும் 30 மணிநேரம் வரை போராடியுள்ளனர். இரண்டு பேரையும் மீட்பு குழு மீட்டு சிகிச்சையில் சேர்த்து உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சிரியாவில் மற்றொரு சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த, புதிதாக பிறந்த குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. தொப்புள் கொடி கூட தாயுடன் இணைந்து இருந்தது. எனினும், நிலநடுக்கத்தில் குழந்தையின் தாய் உயிரிழந்து விட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top