பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர்.
குறிப்பாக, துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில், துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருப்பது இன்று போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருந்த அந்த கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்தனர். அப்போது, லாரி கண்டெயினரில் 52 பேர் அடைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில், 18 பேர் பிணமாக கிடந்தனர். குழந்தைகள் உள்பட எஞ்சிய 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டெய்னரில் இருந்தவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் என்றும் அகதிகள் அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயற்சித்தது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அகதிகளை துருக்கி வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய யூனியனுக்குள் கொண்டு செல்ல முயற்சித்தது தொடர்பாக 4 பேரை பல்கேரிய போலீசார் கைது செய்தனர்.