பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நானா சாஹிப் மாவட்டத்தை சேர்ந்தவர் வாரிஸ். இவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அங்கு காட்டுத்தீ போல பரவியதையடுத்து, வாரிஸ் வீட்டின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் அவரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கினர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் வாரிசை அந்த கும்பலிடம் இருந்து மீட்டு மத நிந்தனை புகாரில் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் ஒன்று வாரிஸ் அடைத்து வைக்கப்பட்டிருந்த போலீஸ் நிலையத்தை அடித்து, நொறுக்கி சூறையாடியது. பின்னர் அந்த கும்பல் வாரிசை போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்துக்கொன்றனர். பின்னர் அவரது உடலை தீவைத்து எரித்தனர். ஏற்கனவே மத நிந்தனை குற்றச்சாட்டில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு அண்மையில் விடுதலையான வாரிஸ் மீண்டும் மத நிந்தனை சர்ச்சையில் சிக்கி அடித்துக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாட்டின் அதிபர் ஷபாஸ் ஷெரீப், காவலில் இருந்த கைதியை பாதுகாக்க தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மாகாண தலைமை போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.