பாரிஸ் நகர பூங்கா ஒன்றில் பெண்ணின் வெட்டப்பட்ட தலை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களை கடும் பீதியில் தள்ளியுள்ளது.
நேற்றைய தினம் பிளாஸ்டிக் பைக்குள் இரத்தம் தோய்ந்த, தலை இல்லாத உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று அதே பூங்காவில் தலை மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் 19ம் வட்டாரத்தில் உள்ள Buttes-Chaumont பூங்காவிலேயே இந்த கோர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த பூங்காவானது குடும்பங்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் பகுதி என்பதுடன், பிரெஞ்சு குற்றவியல் திரைப்படங்களுக்கான இடமாகப் புகழ்பெற்றதாகும்.
இந்த நிலையில், குறித்த பூங்காவில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன், கண்டெடுக்கப்பட்ட உடல்பாகங்கள் வட ஆப்பிரிக்க அல்லது ஐரோப்பிய பெண்மணிக்கு உரியது என பொலிசார் கூறுகின்றனர்.
பூங்காவில் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படும் பகுதியில் முதல் பை திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொலிசார் உரிய அதிகாரிகள் குழுவுடன் முழு வீச்சிலான விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை பெண்ணின் வெட்டப்பட்ட தலை, அதே பூங்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பூங்கா ஊழியர்களே வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை காண நேர்ந்ததாக பொலிசாருக்கு தகவல் அளித்தனர். சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பொதுமக்களுக்கு அடையாளம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், ஐரோப்பா அல்லது வட ஆப்பிரிக்க பெண் என மட்டும் பொலிசார் குறிப்பிட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், மிக சமீபத்தில் தான் குறித்த பெண் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், சமீப பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெரா பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
Buttes-Chaumont பூங்கா பகுதியானது 1760 வரையில் தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளின் உடல்களை மரணதண்டனைக்குப் பிறகு காட்சிப்படுத்தப்பட்ட இடமாகும்.
1860களில் இப்பகுதி பூங்காவாக உருவாக்கப்பட்டது. மேலும், 1974ல் Marseille Contract என்ற திரைப்படமும் 1913ல் The Murderous Corpse என்ற திரைப்படமும் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.