பிரேசிலில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர்.
பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 54 இருந்தனர்.
இந்த பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது.
பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் மரண ஓலமிட்டனர். டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார். ஆனால் பஸ் சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் உருக்குலைந்து போனது.
இந்த கோர விபத்தில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஒரு பெண் அவரது 3 வயது குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.