ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என்ற உக்ரைனின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரிக்கும் என பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறை சாத்தியமல்ல எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில்,
உக்ரைனுக்கு RAF Typhoon மற்றும் F-35 போர் விமானங்களை வழங்குவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை எனவும், தொடர்புடைய விமானங்களை இயக்க உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க கால தாமதமாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் ராணுவத்தில் சோவியத் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட விமானங்களே பயன்பாட்டில் உள்ளது. குறித்த விமானங்கள் 1977ல் முதன் முறையாக பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
ஆனால், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தற்போது மேற்கத்திய நவீன போர் விமானங்களை தந்துதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். குறித்த விமானங்கள் மணிக்கு 1,200 மைல்கள் வேகத்தில் செல்லக் கூடியவை என்பதாலையே ஜெலென்ஸ்கி அவ்வாறான நவீன விமானங்கள் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தற்போதைய சூழலில் உக்ரைனுக்கு RAF விமானங்களை வழங்குவது என்பது நடைமுறை சாத்தியமல்ல எனவும் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிரித்தானியாவின் RAF மற்றும் F-35 போர் விமானங்கள் மிகவும் அதிநவீனமானவை என்பதுடன், அந்த விமானங்களை இயக்க பயிற்சி மேற்கொள்வது என்பது பல மாதங்கள் ஆகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உக்ரைனுக்கு தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் பிரித்தானியா முன்னெடுக்கும் எனவும் அவர்களின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்கவும் தாங்கள் தயார் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஜேர்மனியில் இருந்து அதிநவீன டாங்கிகளை பெறும் முயற்சியில் ஜெலென்ஸ்கி வென்றுள்ள நிலையில் அமெரிக்காவின் F-16 போர் விமானங்களை உக்ரைனில் களமிறக்க தயார் என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுவரை பைடன் நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எட்டவில்லை என்றே கூறப்படுகிறது. F-16 போர் விமானங்களை உக்ரைனில் களமிறக்க நேர்ந்தால் அது விளாடிமிர் புடினை மேலும் கோபமூட்டும் நடவடிக்கையாக மாறும் என பைடன் நிர்வாகம் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
நவீன போர் விமானங்கள் தொடர்பில் பிரான்ஸ் நிர்வாகமும் உக்ரைனை கைவிட்டுள்ளது. அப்படியான முடிவுக்கு வரவேண்டும் என்றால் பல்வேறு நிபந்தனைகளுக்கு உக்ரைன் கட்டுப்பட வேண்டும் எனவும் இமானுவல் மேக்ரான் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.