மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் மெக்சிகோ வந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள ஓக்ஸாகா மாகாணத்தில் இருந்து வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் 40-க்கும் மேற்பட்டோர் பஸ்சில் அமெரிக்கா நோக்கி புறப்பட்டனர்.
இந்த பஸ் பியூப்லா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் சாலையோரமாக கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 13 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.