News

யாழில் வேலன் சுவாமிகளிடம் கோபத்துடன் முரண்பட்ட பொலிஸார்

யாழில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வேலன் சுவாமிகளுடன் பொலிஸார் கோபத்துடன் முரண்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பேரணியை இடைநடுவில் தடுத்து நிறுத்திய பொலிஸார் சிங்கள மொழியில் மாத்திரமே பேச முடியும் எனவும், அதனை பின்பற்றி செயற்படுமாறும் முறையற்ற விதத்தில் நடந்துக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் மதத் தலைவர்கள் மீதான பொலிஸாரின் மரியாதையற்ற நடவடிக்கைகள் விசனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நாட்டில் இடம்பெறும் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளின் போது பௌத்த துறவிகளை மரியாதையாக நடத்தும் பொலிஸார் தமிழ் மதத்தலைவர்களை முறையாக நடத்துவதில்லை என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும், பொருளாதாரம் பின்னடைவை அடைந்துள்ள இந்த நிலையிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று (11.02.2023) யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் கலாச்சார பண்பாட்டை சீரழிக்காதே, எம் தேசத்து தெய்வங்கள் உறங்கும் இடத்தை நாசன் செய்யாதே போன்ற கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமான இப்பேரணி இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியைச் சென்றடைந்து பின் கெட்டபுள் சந்தியில் நிறைவுற்றது.

இந்த போராட்டத்தில் வேலன்சுவாமிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top