சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணி யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைகழக முன்றலிலிருந்து காலை 10. மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்நணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து இந்தா் பேரணியை ஆரம்பித்துள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகிய பேரணி, செம்மணியை அடைந்து அங்கிருந்து நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்தது.
முதலாம் நாள் உரிமைப் பேரணி இரணைமடுவில் நிறைவடைந்துள்ளது.
இரண்டாம் நாள் பேரணி நாளை காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் எழுச்சி அணிகளை இணைத்து, முல்லைத்தீவு நோக்கி புறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.