வடக்கு அயர்லாந்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சரமாரியாக சுடப்பட்டு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் அந்த பொலிஸ் அதிகாரி இளையோர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இரு ஆயுததாரிகள் அந்த அதிகாரியை நெருங்கியதாகவும், திடீரென்று அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டதாகவும் உறுதிப்படுத்தாத தகவல் தெரிவிக்கின்றன.
இதில் பலத்த காயமடைந்த அந்த அதிகாரிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டதுடன், மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல்தாரிகள் அயர்லாந்து எல்லையை கடந்துள்ளதாகவும், ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தின் போது சுமார் 70 இளைஞர்கள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.
இவர்கள் கண் முன்னே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்திற்கு பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மக்களைப் பாதுகாக்கும் ஊழியர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை எனவும் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சம்பவம் நடந்த பகுதியில் திரளான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தாக்குதல் நடந்த பகுதியானது 1998ல் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கான பகுதி எனவும், அச்சம்பவத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.