விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்துப் பற்றி, நீண்டகாலமாக பிரபாகரனின் மெய்ப்பாதுகலாவராகக் கடமையாற்றிய முன்னாள் போராளி ஒருவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் தெரியும் பழ.நெடுமாறன் கூறிய தகவல் பொய் என்று என முன்னாள் போராளி சதிஷ் என்பவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்றிற்கு பழ.நெடுமாறனின் அறிவிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,பிரபாகரன் நந்திக்கடலில் இருந்து தப்பவும் இல்லை. அவர் வெளியில் வரவும் இல்லை. அவர் மே மாதம் 15,16 ஆம் திகதிகளில் முள்ளிவாய்க்காலில் தான் இருந்தார்.
தப்புவதற்கான எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. அப்படி தப்புவதற்கான முயற்சியை எடுப்பதென்றால் புதுக்குடியிருப்பு அல்லது கிளிநொச்சியோடு நாங்கள் தப்பி சென்றிருக்கலாம்.
தலைவர் ஐரோப்பிய நாடுகளிலோ அல்லது காட்டிலோ தப்பி வாழ வேண்டும் என்றால் எப்போதோ போயிருக்கலாம்.
அத்துடன் பிரபாகரன் என்று இலங்கை அரசாங்கம் காட்டிய உடல் அவருடையது இல்லை. அவருடைய உடல் கிடைக்கும் வகையில் அவர் இறந்திருக்கமாட்டார். நிச்சியம் அவருடைய எலும்புகூட கிடைக்காத அளவில் தான் அவர் மறைந்திருப்பார்.
சர்வதேச மோசடி கும்பலில் சிக்கிகொண்டு பழ.நெடுமாறன் இவ்வாறு கருத்துக்களை சொல்கின்றார்.
அவை உண்மையல்ல இப்படி முதலும் அவருடைய மனைவி மகள் பேசினார்கள் என ஒரு பொய் சொன்னார்கள்.
இந்த குற்றங்களை புரிபவர்கள் மீது சட்ட நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.”என கூறியுள்ளார்.
இதேவேளை வவுனியாவை சேர்ந்த முன்னாள் போராளி அரவிந்தன் என்பவர் பிபிசியிடம் இது தொடர்பில் கூறுகையில்,“விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை. இறுதி யுத்தத்தில் அவர் எங்கும் தப்பித்து சென்றிருக்கமாட்டார்.
மாறாக அவருடைய முடிவை அவரே தேடிக்கொண்டிருப்பார் என்னை பொறுத்தவரை அண்ணன் அப்படி தான் செய்திருப்பார்.
அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது தொடர்பில் இறுதி சண்டை களத்தில் நின்றவர்கள், நந்திக் கடலில் நின்றவர்கள் அல்லது அவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர்கள் பதிலளிப்பது தான் உகந்தது.
போராளிகள் என்ற வகையில் இதை ஒரு சந்தேகக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றோம்.
தற்போது இலங்கை அரசாங்கம் தீர்வு திட்டங்களை வழங்கும் போது அதை குழப்பிவிடும் ஒரு தரப்பினரின் செயலாகவே இதை பார்க்கின்றோம்.
அவர் தொடர்பில் இந்தியாவோ வேறு நாட்டு இராணுவமோ கூறுவது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் ஒரு துரோகமே தவிர ஒரு தீர்வாக அமையாது.”என கூறியுள்ளார்.