தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற (13.02.2023) செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. அவருடன் தொடர்பில்தான் உள்ளோம். பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர்.
உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது. தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார் எனக் கூறிய விடயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் உலகத் தமிழர் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் இனிப்பு வழங்கி இதனை கொண்டாடினர்.
பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்த பின்னர் இலங்கையிலும், உலகில் வாழும் தமிழ் மக்களிடத்தில் பரபரப்பான ஒரு நிலையை தோற்றுவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை இராணுவமும் தங்களது அறிவிப்பை விடுத்துள்ளது.