ஹாங்காங்கில் சொத்து தகராறில் மாடல் அழகியை முன்னாள் கணவர் கொலை செய்து உடலை துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் தெரிய வந்து உள்ளது.
ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபி சோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற அவர், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த 2023-ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கடந்த வாரம், எல்அபிசியல் மொனாக்கோ என்ற பேஷன் செய்தி இதழின் டிஜிட்டல் முகப்பு பக்கத்தில் அவரது படம் இடம் பெற்றிருந்தது. சமூக ஊடகத்திலும் பிரபல நபரான அவர், இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பாலோயர்களை கொண்டு உள்ளார். வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அனுபவித்து வருகிறேன் என அதில் தெரிவித்து உள்ளார்.
இவருக்கு திருமணம் நடந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனினும், கணவரிடம் இருந்து பிரிந்து விட்டார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அவர் காணாமல் போனார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், போலீசார் நேற்று முன்தினம் தாய் போ மாவட்டத்தில் கசாப்பு பிரிவில் வைத்து அவரது உடல் பாகங்களை மீட்டனர். அவரது 2 கால்களும் பிரிட்ஜில் காணப்பட்டன. தலை, உடல் மற்றும் கைகளை போலீசார் தேடி வருகின்றனர். அவரை முன்னாள் கணவர் கொலை செய்தது தெரிய வந்தது. அவரை கண்டுபிடிக்க 100 போலீசார் வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆளில்லா விமானமும், மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், வேறொரு தீவுக்கு தப்பி செல்ல இருந்த முன்னாள் கணவரையும், அவரது சகோதரரையும், அபியின் மாமனார் உள்ளிட்டோரை போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளனர். மீதமுள்ள உடல் பாகங்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.
அவர்கள் தப்பி செல்லும்போது முன்னாள் கணவரிடம் இருந்த ரூ.52.81 கோடி பணமும், லட்சக்கணக்கான மதிப்புள்ள பல்வேறு ஆடம்பர ரக வாட்சுகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். சொத்து தகராறுக்காக இந்த கொலை நடந்து உள்ளது என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.