News

அமெரிக்காவின் பாதுகாப்பு வியூகத்துக்குள் மாட்டுப்பட்டுள்ள சிறிலங்கா

அமெரிக்கா மற்றும் சிறிலங்காவுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்க உதவிப் பாதுகாப்புச் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினர் நேற்றைய தினம் சிறிலங்காவை வந்தடைந்துள்ள நிலையில், இன்று பாதுகாப்பு அமைச்சின் முக்கிய தரப்பினருடன் அவர்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி ரோயல் தலைமையிலான குழு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல். கமல் குணரத்ன ஆகியோரை தனித் தனியே இன்று சந்தித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை சந்தித்த அமெரிக்கா பிரதிநிதிகள் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் அன்டனி நெல்சனும் பங்கேற்றிருந்தார்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை பாதுகாப்பு அதிகாரி செத் நெவின்ஸ், அமெரிக்க தெற்காசிய பிரிவு இராணுவ அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் கிறிஸ்டியன் மிச்செல் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் ஹர்ஷ விதானாராச்சி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் உடன் இருந்தனர்.

இதையடுத்து, சிறி ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை அமெரிக்கா பிரதிநிதிகள் குழு சந்தித்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர உறவுகள் நினைவுகூரப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பிலும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மை குறித்தும் இரு தரப்பினரும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை பாதுகாப்பு அதிகாரி செத் நெவின்ஸ், அமெரிக்க தெற்காசிய பிரிவு இராணுவ அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் கிறிஸ்டியன் மிச்செல் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்குபற்றியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top