News

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 28 ஆயிரம் ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,192 ஆக உயர்ந்து உள்ளது.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த வாரம் ஓய்வு நாளான ஞாயிற்று கிழமை முடிந்து அடுத்த நாள் விடியல் தொடங்குவதற்கு முன்னரே, சோகம் ஏற்பட்டது.

துருக்கியின் எல்லையில் கடந்த வார திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனை அடுத்து, பேரிடர் பகுதிகளுக்கு துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் சென்று பார்வையிட்டு உள்ளார். அந்நாட்டில் வருகிற மே 14-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எர்டோகன் மீண்டும் போட்டியிடும் முனைப்பில் உள்ளார். எனினும், இந்த விவகாரம் அவரது எதிர்க்கட்சிக்கு சாதகம் ஏற்படுத்தி உள்ளது.

இந்த பேரிடரால் தேர்தலை தள்ளி போடப்பட கூடிய சூழலும் காணப்படுகிறது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு இந்தியா போன்ற உலக நாடுகள் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்டதில், தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மொத்த உயிரிழப்பு 28,192 ஆக உயர்ந்து உள்ளது என சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

துருக்கியின் துணை அதிபர் புவாத் ஓக்தே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, துருக்கி நிலநடுக்க உயிரிழப்பு எண்ணிக்கை 24,617 ஆக உயர்ந்து உள்ளது என கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top