கொரோனா தொற்று ஏற்பட்டு சில வாரங்களில் பெரும்பாலானோர் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் சிலருக்கு 4 முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்கு பிறகும் கூட நோயின் அறிகுறிகள் நீடிக்கும். இவற்றை ‘நீண்ட (லாங்) கோவிட்’ என அழைக்கின்றனர்.
இதுபோன்ற நீண்ட கோவிட் பாதிப்புகள் சிலருக்கு முகம் குருட்டு தன்மை (புரோசோ பக்னோசியா) என்ற நரம்பியல் கோளாறை ஏற்படுத்தலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் முகங்களை அடையாளம் காண இயலாமல் போகலாம்.
இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் ஒரு ஆய்வை நடத்தினர். இதில் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 54 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நரம்பியல் கோளாறு பிரச்சினை இருப்பதாக கூறினர்.
ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு முகங்களை அடையாளம் காண்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை என்று கூறினார்.
கார்டேக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் சில தனி நபர்கள் நீண்ட கோவிட் காரணமாக சிரமங்களை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.