மூன்றாவது பாதுகாப்பான நாடு ஒப்பந்தத்தை அமெரிக்காவும் கனடாவும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், இது புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
புதிய ஒப்பந்தத்தின் வழியாக, ரோக்ஸ்ஹாம் சாலை போன்ற அதிகாரப்பூர்வமற்ற பாதையூடாக கடக்கும் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தப்படும் என்றே நம்பப்படுகிறது.
இந்த மாறுதல்கள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது. வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இந்த எல்லை விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவுக்கு பின்னர், சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் புலம்பெயர் மக்களை அதிகாரிகள் தரப்பு, அமெரிக்காவின் மிக அருகாமையில் உள்ள பகுதிக்கு திருப்பி அனுப்புவார்கள்.
மேலும், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு கூடுதலாக 15,000 புலம்பெயர் மக்களை வரவேற்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. 2004ல் இருந்தே புகலிடக் கோரிக்கையாளர்கள் தாங்கள் செல்லக் கூடிய மூன்றாவது பாதுகாப்பான நாடு குறித்து தெரிவிக்க வேண்டும் என்பது STCA அதாவது பாதுகாப்பான மூன்றாவது நாடு ஒப்பந்தத்தின் ஒரு அம்சமாகும்.
நடைமுறையில், கனடாவில் உள்ள எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து உத்தியோகபூர்வ சோதனைச் சாவடிகளில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புகிறார்கள்.
ஆனால் கியூபெக்கில் உள்ள ரோக்ஸ்ஹாம் சாலை போன்ற இடங்களில் சட்டவிரோதமாக கடக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்கள் திருப்பி அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட 40,000 புலம்பெயர்ந்தோர் ரொக்ஸ்ஹாம் சாலை வழியாக கனடாவிற்குள் நுழைந்ததாக பெடரல் அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. டிசம்பரில் மட்டும், 4,689 புலம்பெயர்ந்தோர் கனடாவிற்குள் நுழைந்துள்ளனர்.
ரோக்ஸ்ஹாம் சாலை ஊடாக நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களால், உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து ரோக்ஸ்ஹாம் சாலையை மொத்தமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்த நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவதற்காக 5,000 கிலோமீற்றர் நில எல்லை முழுவதும் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.