கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்ய போர் விமானம் தாக்குதல் நடத்தியதால் ஆளில்லா விமானம் விபத்திக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், கருங்கடல் பிராந்தியத்தில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் சுகோய்-27 போர் விமானம் எரிபொருளை ஊற்றி, அதன் மீது தாக்குதல் நடத்தியதில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
மேலும் MQ-9 ரீப்பர் கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை ரஷ்யா தாக்கியதன் காரணமாகவே அமெரிக்க ராணுவம் அதை கருங்கடலில் வீழ்த்தி சிதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பென்டகன் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு பிறகு ஆளில்லா விமானம் அடிப்படையில் பறக்க முடியாததாக இருந்தது என்று பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில் செவ்வாயன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த மோதலில் ரஷ்ய வீரர்கள் தங்களின் உள் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை, மேலும் கருங்கடலில் விழுந்த அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்யா தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ட்ரோன் விபத்தானது கூர்மையான சூழ்ச்சி காரணமாக நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதே சமயம் வீரர்கள் தங்கள் சொந்த விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக திரும்பினர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.