அமெரிக்க நாட்டு மக்கள் மீது 6 மாதங்களுக்குள் முன்னறிவிப்பின்றி பயங்கர தாக்குதல் நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டு உள்ளது என ராணுவ அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்சி தலீபான்களின் கைவசம் போனது. எனினும், அவர்களுக்கும், மக்களுக்கும் எதிராக வேறு பயங்கரவாத அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய ராணுவ படைக்கான ஜெனரல் மைக்கேல் குரில்லா கூறும்போது, அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகள் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.கே.பி. எனப்படும் பயங்கரவாத அமைப்பு இன்னும் 6 மாதங்களுக்குள் தாக்குதல் நடத்த கூடும். இந்த பயங்கரவாத தாக்குதல் குறைந்த அளவில் அறிவித்தோ அல்லது எந்தவித எச்சரிக்கையும் இல்லாமலோ கூட அதிரடியாக நடத்தப்படலாம். அதுவும் சொந்த நாட்டை விட வெளிநாடுகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற பின், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் என்பது தற்போது கடினம் வாய்ந்த ஒன்றாகி விட்டது. ஆனால், சாத்தியமற்ற ஒன்று கிடையாது என குரில்லா கூறியுள்ளார்.
இதுபற்றி மிஸ்ஸிஸிப்பி நகரை சேர்ந்த செனட் உறுப்பினரான ரோஜர் விக்கர் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டு சென்ற பாதுகாப்புக்கான வெற்றிடம், தலீபான், அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். அமைப்புகளால் நிரப்பப்பட்டு உள்ளன. அதனால், அவர்களின் கிளைகள் உலகம் முழுவதும் சக்தி நிறைந்த ஒன்றாக பரவி விட்டன என கூறியுள்ளார்.