அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட பயங்கர புயல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட பயங்கர புயலால் 26 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத பனிப்புயல் வீசி வருகிறது. அது நாட்டின் பல மாகாணங்களை புரட்டி போட்டது.
இந்த நிலையில் மிசிசிபி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் மிசிசி்பி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே பல நகரங்கள் இருளில் மூழ்கியது. மேலும் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதனையடுத்து தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த பயங்கர புயலால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவில் பனிப்புயல், நில நடுக்கத்தை தொடர்ந்து தற்போது பயங்கர புயல் வீசி பாதிப்பை ஏற்படுத்தி வருவது அங்குள்ள பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.