போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூதரகத்தில் இருந்த இந்திய தேசிய கொடியை அகற்றினர்.
இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமானோர் திரண்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து தூதரகத்தில் இருந்து பல அடி தூரத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டனர். அப்பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூதரகத்துக்குள் யாரும் நுழைந்து விடாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இந்திய தூதரகம் முன்பு போராட்டம் சிறியதாக தொடங்கினாலும் மாலையில் எண்ணிக்கை அதிகரித்தது. சுமார் 2 ஆயிரம் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் தடுப்புகளை உடைக்க முயன்றனர்.
அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், மை மற்றும் வண்ண பொடிகளை வீசினர் என்றனர். இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தூதரக கட்டிடம் முன்பு பெரிய அளவில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு இருக்கிறது.