உக்ரைனுடனான போரின் தொடக்கத்தில் கைப்பற்றி, 8 மாதங்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷியா அமைத்து உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போரின் தொடக்கத்தின்போது கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷியா வைத்திருந்து உள்ளது. அப்போது, கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷியா அமைத்து உள்ளது என கூறப்படுகிறது.
உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கெர்சன் நகர் ரஷியா கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், தெருக்களில் நடந்து சென்ற பலர் ரஷிய வீரர்களால் பிடிபட்டு உள்ளனர். அவர்களது மொபைல் போன்களில் உக்ரைனை சேர்ந்தவர்கள் என்பதற்கு ஆதரவான தடயங்கள் காணப்பட்டதும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கைதிகளாக அடைப்பட்ட பலர் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் கெர்சன் நகரை உக்ரைன் ராணுவம் தன்வசப்படுத்தியது. அதன்பின்பே, சித்ரவதை முகாம்கள் பற்றிய விவரங்கள தெரிய வந்து உள்ளன. இதுபோன்று கெர்சனில் 20 சித்ரவதை அறைகள் காணப்பட்டு உள்ளன.
ரஷிய படைகள் இவற்றை நிறுவி, நிர்வாகம் செய்து, முகாம்களை அமைக்க நிதியுதவியும் செய்த விவரங்கள் இங்கிலாந்து வழக்கறிஞர் வெய்னே ஜோர்டாஷ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
இதன்படி, உயிர் தப்பிய ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் மேற்கூறிய பல விவரங்கள் தெரிய வந்து உள்ளன. இதன்படி, உக்ரைனின் தேசிய மற்றும் கலாசார அடையாளங்களை அழிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என குழு தலைவர் வெய்னே கூறியுள்ளார்.
உக்ரைனில் சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், அடித்தும், மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி ஏற்படுத்தும் கொடுமைகளும் நடந்து உள்ளன. ரஷிய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளை கற்று, உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர்.
இந்த முகாம்களில் உள்ள 400 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்து விட்டனரா? அல்லது ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டனரா? என்பதும் தெளிவாக தெரியவில்லை என ஜோர்டாஷ் கூறியுள்ளார்.