News

உலக நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை!

வடகொரியா ஏவுகணை சோதனைகளின் நீட்சியாக, நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தும் அதிநவீன ஏவுகணையை சோதித்துள்ளது.

இந்த வீடியோவை இன்று வடகொரியா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து தென் கொரிய பிராந்தியத்தில் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா, அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதித்து வருகின்றது.

 

கடந்த 21ம் திகதி முதல் 23ம் திகதி வரை நடத்தப்பட்ட இந்த சோதனைகளை தென் கொரியாவும் உறுதிப்படுத்திய நிலையில், இதுதொடர்பான படங்களை வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.

கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன் அணுசக்தி போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.

தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் வடகொரியா நடத்தி இருக்கும் இந்த புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், வடகொரியாவின் அணு சக்தி போர் திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இது எச்சரிக்கையாக இருக்கும் வடகொரியா இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, எதிரிநாட்டு கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை குறிவைத்து நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தும் அதிநவீன ஏவுகணையை சோதித்து வடகொரியா அண்டைநாடுகளை அதிரவைத்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நடந்து வரும் சூழலில், வடகொரியாவின் இந்த சோதனையும் உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top