News

கைதாகும் டொனால்டு டிரம்ப்: பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கூண்டில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க வரலாற்றில் குற்ற வழக்கு பதியப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதி என்ற பெருமையை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார்.

ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவருக்கு குற்றத்தை மறைக்க பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கான ஆவணப் புகைப்படத்திற்கு முகம் காட்டுவதுடன், குற்றவாளிகளுக்கான தரவுகளின் அவரது கை ரேகைகளும் பதிவு செய்யப்பட உள்ளது.

இதனையடுத்து, அவர் விசாரணைக் கைதியாக சிறைக்கு செல்ல இருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது. ஆனால், டொனால்டு டிரம்பின் கைது நடவடிக்கையானது எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் கடும் விவாதம் எழுந்துள்ளது.

கை விலங்கிடப்பட்டு, பொலிஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்படுவாரா என்பது தொடர்பிலும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் டிரம்பின் சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், அவர் வழக்கினை எதிர்கொள்ளும் பொருட்டு நீதிமன்றம் முன்பு சரணடைவார் எனவும், புளோரிடாவில் இருந்து நியூயார்க் நகருக்கு மிக விரைவில் திரும்புவார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் குற்றப்பத்திரிகையில் வன்முறையற்ற குற்றச் சாட்டுகள் மட்டுமே பதிவாகியிருப்பதால், முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கைது விவகாரத்தை டொனால்டு டிரம்ப் தமது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், 2024 தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்பேற்க திட்டமிட்டுவரும் டிரம்புக்கு இந்த வழக்கு விவகாரம் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

டிரம்ப் கைதாவது சில நாட்கள் தாமதமாகலாம் என்றே தெரியவந்துள்ளது. இருப்பினும் விலங்கிடப்படுவதும், குற்றவாளிகளுக்கான புகைப்படத்திற்கு முகம் காட்டுவதும், விரலடையாளங்கள் பதிவு செய்யப்படுவதும் உறுதி என்றே கூறுகின்றனர்.

மேலும், 1876 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கைதாக இருப்பது இதுவே முதல்முறை. அமெரிக்காவின் 18வது ஜனாதிபதியான யுலிஸஸ் எஸ். கிராண்ட் என்பவர் தமது குதிரையில் மிக வேகத்தில் சென்றதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 20 டொலர் அபராதம் செலுத்தியதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top