பிரித்தானியாவில் பட்டப்பகலில் நகைக் கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த நபர்களுக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பர்மிங்ஹாமில் கடந்தாண்டு மார்ச் மாதம் சிறிய ரக சரக்கு வாகனத்தை திருடிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, பட்டப்பகலில் திருடிய வாகனத்துடன் நகைக் கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு கடைக்குள் புகுந்தனர்.
பின் அங்கிருந்தவர்களை கோடாரியை காட்டி மிரட்டியதுடன், சம்மட்டியால் கண்ணாடி பெட்டியை உடைத்து 3 கோடி மதிப்புள்ள 5 கிலோ நகைகளை திருடி விட்டு வெறும் 70 நொடிகளில் அங்கிருந்து தப்பியோடினர்.
இதையடுத்து தப்பி ஓடிய கொள்ளை கும்பல் அடுத்த 2 மணி நேரத்தில் மற்றொரு நகை கடையில் திருட்டு நகைகளை விற்க முயன்றுள்ளனர்.
பட்டப்பகலில் திருட்டை நிகழ்த்தி விட்டு, திருடிய அந்த நகைகளை மற்றொரு கடையில் விற்க முயன்ற போது மர்ம கும்பலை பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலுக்கு 12 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.