பிரான்சில் அதிபர் இமானுவேல் மக்ரோனின் முதன்மைத் திட்டமாக உள்ள ஒய்வூதிய மறுசீரமைப்புக்கு எதிராக நாளை மீண்டும் ஒரு முறை நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அரசாங்கத்தின் இந்தத் திட்டம் குறித்து பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை இன்று விவாதங்களை தொடர்ந்த நிலையில், நாளை பிரான்சை முடக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
பிரான்சில் கடும் இழுபறிக்குள் சிக்கியுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு இந்த வாரம் ஒரு முக்கியமான வாரமாக தெரிகிறது.
இந்தச் சர்ச்சைக்குரிய திட்டம் மீதான விவாதங்கள் இன்று பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் மீண்டும் ஆரம்பித்திருந்தன.
இதனையடுத்து நாளை செவ்வாய்கிழமை பிரான்ஸை முடக்கி இந்தச் சீர்திருத்த திட்டத்துக்கு எதிரான இன்னொரு கடுமையாக செய்தியை கூற தொழிற்சங்கள் விரும்புகின்றன.
உத்தேச ஓய்வூதிய சீர்திருத்தத்தில் தற்போதுள்ள சட்டபூர்வ ஓய்வூதிய வயதான 62 ஐ 64 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிடுகிறது.
இதுவரை இந்த முயற்சிக்கு எதிராக தேசிய ரீதியில் பல போரட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், நாளையும் இன்னொரு போராட்டம் இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற போராட்டங்களின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள தொழிற்சங்கங்கள் நாளையும் நாடளாவிய ரீதியில் லட்சக்கணக்காக மக்களை ஒன்று திரட்ட முயற்சிகளை செய்துவருகின்றன.
தொடர்ந்தும் போராட்டங்கள் எழுச்சியுறுவதால் இந்த விடயத்தில் அரசாங்கம் பின்வாங்குவது சாத்தியம் என தொழிற்சங்கள் நம்பினாலும் அரசாங்கமும் திட்டமிட்டபடி தனது சீர்திருத்த்ததை நகர்த்த விரும்புகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது செனட் இந்த விடயம் குறித்த விவாதங்களை நடத்திவருகின்றது.
எனினும் நாளை தலைநகர் பரிசிலும் போக்குவரத்துறையிலும் பணிப்புறக்கணிப்பு போரட்டங்கள் இடம்பெறுவதால் போக்குவரத்தில் கடும் இடையூறுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளன.
பிரான்சின் தேசிய தொடருந்து வலையமைப்பு இன்றிரவே சில வலையமைப்புகளில் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துவிட்டது.
பாடசாலைகள், கல்லூரிகளில் ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால் நாளை கல்விக்கூடங்களின் இயக்கமும் முடக்கப்படவுள்ளன.