News

மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து 340க்கும் மேற்பட்டோர் மீட்பு!

மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து, 103 ஆதரவற்ற சிறார்கள் அடங்களாக 340க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெராக்ரூஸ் மாநிலத்தில் ட்ரக்கில் மொத்தம் 343 பேர் காணப்பட்டதாக மெக்சிகோவின் தேசிய இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்க எல்லைக்கு அழைத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் பொதுவான பாதையில் குறித்த ட்ரக் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவரும் பாதிப்பில்லாமல் இருப்பதாகவும், ட்ரக்கில் மின்விசிறிகள் மற்றும் காற்றோட்ட துளைகள் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். எனினும், ஓட்டுநர் குறித்த தகவல் இல்லை.

புலம்பெயர்ந்தோர் அவர்களின் நிலை தீர்மானிக்கப்படும் வரை மெக்ஸிகன் சமூக சேவைகளால் பராமரிக்கப்படுவார்கள்.

குவாத்தமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறியவர்கள், மெக்ஸிகோ வழியாக பயணிக்கும் சமீபத்திய கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

மத்திய அமெரிக்காவில் வறுமை மற்றும் வன்முறையில் இருந்து தப்பித்து, பல ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர், அமெரிக்க எல்லையைத் தாண்டி மக்களை கடத்துபவர்களுக்கு பெரும் தொகையை செலுத்தி வருகின்றனர்.

கடந்த 12 மாதங்களில் அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்று குறைந்தது 853 புலம்பெயர்ந்தோர் இறந்ததாக எல்லை ரோந்து தரவு காட்டுகிறது.

இது 2022ஆம் ஆண்டின் நிதியாண்டை அமெரிக்க அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக மாற்றியது, இது 2021 இல் 546 புலம்பெயர்ந்தோர் இறப்புகளின் முந்தைய சாதனையை விட அதிகமாகும்.

அதே காலகட்டத்தில் தென்மேற்கு எல்லையில் 2.2 மில்லியன் குடியேறியவர்களை அமெரிக்க எல்லைக் காவல் படையினர் கைது செய்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top