வட பகுதியில் காணப்படும் பாரிய இராணுவ பிரசன்னம், காவலரண்கள் மற்றும் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழர் தரப்பு கோரிக்கை விடுத்துவரும் நிலையில், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள பரிந்துரையில் வடக்கில் சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ள நகர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் பிரச்சினையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் முக்கிய கரிசனைக்குரிய விடயமாக இருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
எனினும் பொதுவான குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் வடக்கிற்கு நிரந்தரத் தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் அவசியம் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இராணுவச் சோதனைச் சாவடிகளில் வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், பெண்கள் மீதான உடல் சோதனைகள் மற்றும் பயணிகளை பேருந்துகளில் இருந்து இறங்கச் செய்தல் மற்றும்/அல்லது அவர்களது லொறிகளில் இருந்து பொருட்களை இறக்குதல் போன்ற செயற்பாடுகளையும் ஆணைக்குழு வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
எனவே, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மாற்று வழிகளைக் பின்பற்ற அந்தந்தப் படைகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்கக் குழுவின் உறுப்பினர்கள் தகுதி மற்றும் நேர்மை தன்மை கொண்டவர்களாக இருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
எந்தவொரு அரசியல் தலையீடும் அல்லது பாரபட்சமும் இன்றி சுயாதீனமாக செயற்படுவதற்கான அதிகாரம் குழுவிற்கு வழங்கப்பட வேண்டுமென அவர்கள் மேலும் வலியுறுத்தினர்.