வடக்கு, கிழக்கில் வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் வடக்கு, கிழக்கு அரசியல் நிலவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற மாகாண சபை உள்ளிட்ட அதிகாரங்கள் அனைத்தையும் முதலில் முழுமையாக நடைமுறைப்படுத்திவிட்டு தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள், நாங்கள் பேசத் தயாராக இருக்கின்றோம் என்ற விடயத்தை ஒரே குரலில் வடக்கு, கிழக்கு அரசியல் தலைவர்கள் அரசிடம் வலியுறுத்த வேண்டும்” என்றும் மனோ கணேசன் இடித்துரைத்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் இறுதி இலக்கு வேறாக இருந்தாலும், ஆரம்பப் பயணம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்